×

ஆங்கிலேய துரையை காத்த வேதநாயகி

பவானி -  ஈரோடு

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இப்போதைய கோவை பகுதியின் ஆணையராகப் பொறுப்பு மேற்கொண்டிருந்தார், வில்லியம் கேரோ என்ற ஆங்கிலேயர். தம்முடைய அலுவலக நடவடிக்கையாக தம் கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிர்வாகச் சூழ்நிலையை கவனித்து வருவார். ஒரு முறை பவானியில் இருந்த ஒரு மாளிகைக்கு வந்த வில்லியம் கேரோ, அங்கு தங்கியபடி அலுவல்களை கவனித்தார். ஒருநாள் இடி, மின்னலுடன் பெருமழை கொட்டித் தீர்த்தது. கேரோவுக்கு  தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவது அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அப்போது அந்த மாளிகையில் தம் பணியாட்களில் சிலர் பவானி அம்மனை வேண்டிக் கொண்டிருப்பதையும் அவர்கள் முகத்தில் எந்தக் கவலையும் இல்லாததையும் கவனித்தார். அவர்களிடம் விசாரித்தபோது, ‘அன்னை வேதநாயகி எந்த இயற்கைப் பேரழிவும் ஏற்படாதபடி நம் அனைவரையும் காப்பாள்’ என்று பதிலளித்தார்கள்.

அவர்களுடைய நம்பிக்கை அவருக்கு சிரிப்பைத் தந்தது. ‘வேடிக்கையான மக்கள். எத்தனை நம்பிக்கை இவர்களுக்கு!’ என்று கேலியாக அதிசயப்பட்டார். ‘சரி, எப்படியோ போங்கள்,’ என்று அவர்களுடைய நம்பிக்கையை அலட்சியப்படுத்திவிட்டு, தன் படுக்கையறைக்குச் சென்றார் கேரோ. படுக்கையில் படுத்த அவருக்கு உடனே உறக்கம் வரவில்லை. ஒரு மயக்க நிலையில் உறக்கமும் விழிப்புமாகப் படுத்திருந்தார். அப்போது யாரோ ஒருவர் அவரருகே வந்து தட்டி எழுப்புவது போலத் தெரிந்தது. பாதுகாப்பு மிகுந்த அந்தப் பகுதிக்குள், அதுவும் தன் படுக்கையறைக்குள் வந்திருப்பவர் யார் என்று திடுக்கிட்டு எழுந்துப்பார்த்தார் கேரோ. எழுப்பியது ஒரு சிறுமி. ‘என்கூட வா,’ என்று சைகையால் அவரை அழைத்தாள். பிறகு முன்னே சென்றாள். ஏதோ மந்திரத்தால் கட்டுண்டவர் போல கேரோ அவள் பின்னாலேயே சென்றார்.

அந்த பங்களாவுக்கு வெளியே வந்த அவர் கொட்டும் மழையில் நனைந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்தச் சிறுமி மெல்ல நகர்ந்து பக்கத்திலிருந்த கோயிலுக்குள் சென்று மறைந்தது தெரிந்தது. அதே சமயம் ‘மட மட’ வென்ற ஒலியுடன் அவர் தங்கியிருந்த பங்களா இடிந்து விழுவதையும், உள்ளிருந்தவர்கள் எல்லோரும் வெளியே வந்து நின்று அதைப் பார்ப்பதையும் கவனித்தார். அந்தச் சிறுமி தன்னை மட்டுமல்ல, தன்னைச் சார்ந்தவர்கள் எல்லோரையுமே காப்பாற்றியிருக்கிறாள்!அப்படியே சிலிர்த்துப் போனார் கேரோ. உடனே அந்த ஆலயத்து அம்மனை, வேதநாயகியை தரிசிக்கத் துடித்தார். ஆனால் அப்போதைய மரபுப்படி அந்நியர் கோயிலுக்குள் நுழைய முடியாது. ஆனாலும் அவரது நிலைக்கு கோயில் அர்ச்சகர்கள் இரங்கி, அவருக்கு தரிசன வாய்ப்பு அளிக்கத் தீர்மானித்தார்கள். ஆலயத்தின் வெளிச்சுவரில் சில துவாரங்களைப் போட்டு, அவற்றின் வழியாக அம்பாளை அவர் வணங்க ஏற்பாடு செய்தனர். மனம் கசிய அம்பாளை வழிபட்ட அவர், தன் நன்றிக் காணிக்கையாக ஓர் தந்தத் தொட்டிலை கோயிலுக்கு அளித்தார். “கேரோ 1804” என்று பொறிக்கப்பட்டுள்ள அந்த தந்தத் தொட்டிலையும் அவர் தரிசித்த வெளிச்சுவர் துவாரங்களையும் ஆலயத்தில் இன்றும் காணலாம்.

பவானி, காவிரி நதிகளோடு, கண்ணிற்குப் புலனாகாத ‘அமிர்தவாஹினி’ நதியும் சங்கமிக்கிறது. இதுதான் தென்னாட்டுத் திரிவேணி, தட்சிணப் பிரயாகை எனப்படும் புனிதத்தலமான ‘பவானி முக்கூடல்’.பத்மகிரி, வேதகிரி, சங்ககிரி, மங்களகிரி, நாககிரி என்ற ஐந்து மலைகளால் சூழப்பட்டு இயற்கை எழில் கொஞ்ச அமைந்துள்ளது இத்தலம். தேவாரத்தில் ‘திருநணா’ என்று புகழப்பட்டுள்ளது. அதாவது, தீமைகளை அகற்றும் தலம்.இப்பழமையான ஆலயம், ஆறு ஏக்கர் பரப்பில், ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் அழகிய சுதைச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. கோயிலின் நுழைவாயிலில் கோட்டை விநாயகர் உள்ளார். உட்புறத்தில் ராஜகணபதி, முத்துக்குமார சுவாமி சந்நதிகள். வலதுபக்க மண்டபத்தில் ஆதிகேசவப் பெருமாள், சௌந்திரவல்லித் தாயார், நரசிம்மர் சந்நதிகள் அமைந்துள்ளன. சங்கமேஸ்வரர் சந்நதி கிழக்கு நோக்கியுள்ளது. வேதநாயகி என்ற திருப்பெயருடன் அன்னை தனிச் சந்நதியில் அருள்கிறார். சங்கமேஸ்வரர் சந்நதிக்கும் வேதநாயகி அம்மன் சந்நதிக்கும் இடையில் சுப்பிரமணியர் சந்நதி அமைந்து “ஸோமாஸ்கந்த” வடிவத்தை நினைவுபடுத்துகிறது.செல்வச் செழிப்பிற்கு அதிபதியாக விளங்கும் குபேரனும் படைப்புக் கடவுளான பிரம்மனும் இந்த சங்கமேஸ்வரரை வழிபட்டுச் சிறப்புப் பெற்றனர். ராஜ ரிஷியான விஸ்வாமித்திரர் முக்கூடலில் நீராடி முக்கண்ணனைப் பூஜித்ததால் பிரம்ம ரிஷி என்று அழைக்கப்பட்டார். வியாசர் இம்மூர்த்தியைப் பாடியதால் வேதங்களை வகுக்கும் திறன் பெற்றார். தலவிருட்சம், இலந்தை மரம்.

ஒவ்வொரு அமாவாசையன்றும், ஆடிமாத ஆடிப்பெருக்கு நாளிலும் முக்கூடலில் நீராட, திரளாக மக்கள் கூடுகின்றனர்.  முக்கூடலில் நீராடினால் முக்தி கிட்டும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. முக்கூடல் கரையில் உள்ள சிறிய ஆலயத்தில் அமிர்தலிங்கம் அருட்பாலிக்கிறார். தேவர்களும், அசுரர்களும் அமுதத்தைக் கைப்பற்ற சண்டையிட, அமிர்த குடம் நிலத்தில் விழுந்தது. அதிலிருந்து தெறித்த அமுதத்துளி, அமுத வாஹினி நதியாக பூமிக்கு அடியில் ஓட ஆரம்பித்தது. காலியான குடம்தான் லிங்கமாயிற்று. பராசர முனிவர் அந்தக் குடத்திற்கு அமிர்தலிங்கேஸ்வரர் என்று பெயரிட்டு வழிபடத் தொடங்கினார். இந்த லிங்கத்தை ஆவுடையாரிலிருந்து பிரித்து எடுத்து மீண்டும் ஆவுடையாரிலேயே வைக்க முடியும்! குழந்தை இல்லாதவர்களும் வயிற்று வலியால் அவதிப்படுபவர்களும் இந்த லிங்கத்தை வழிபட்டுப்பயன்பெறுகின்றனர். சங்கமேஸ்வரர் ஆலயத்தை சிற்பக் கலைக் கருவூலம் என்றே சொல்லலாம். தட்சிணாமூர்த்தி சிலையின் இருமருங்கிலும் ஒரே கல்லில் குடைந்தெடுக்கப்பட்ட சங்கிலிகள்; தண்ணீர் விட்டால்  சிரிக்கும் பாவை சிலை, ஆதிகேசவப் பெருமாள் சந்நதியில் யாழிசைத்துப் பாடும் அனுமன் என்று சிற்பக் கலை நேர்த்தியை வியந்து போற்றலாம்.இங்குள்ள ஜுரஹரேஸ்வர மூர்த்தி சிலை மூன்று கால்களை உடையது. இவருக்கு சந்தனக் காப்பிட்டு வணங்கினால் கடுமையான காய்ச்சலும் தணிவதாகக் கூறுகின்றனர்.சங்கமேஸ்வரர் ஆலயம் ஈரோடு மாவட்டம் பவானியில் அமைந்துள்ளது.

Tags : Vallanayagi ,pedestrian ,
× RELATED சென்னை காதர் நவாஸ்கான் சாலையில் ரூ.19.81...